சிரியாவில் உள்ள போர் சூழ்நிலைகள்

குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிந்த 7 வயது சிறுமி பானா அலாபெத்துக்கு துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே ஏற்பட்ட சண்டையில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அண்டை நாடான துருக்கியில் மட்டும் பல லட்சம் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவை சேர்ந்த பானா அலெபெத் என்னும் 7 வயது சிறுமி தனது தாயின் உதவியுடன் அலெப்போவின் சூழ்நிலைகள் குறித்து மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அலாபெத் மற்றும் அவரது தாயாரின் ட்விட்டரை சுமார் 3,33,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டதையும் அலாபெத் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன் தாக்குதலில் சிக்கிக்கொண்ட அலாபெத் அரசு படைகளின் உதவியுடன் சிரியாவிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், சிறுமி அலாபெத் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து உரையாடியுள்ளார். அலாபெத் குடும்பத்தினருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை துருக்கி அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அலாபெத் ”துருக்கி அதிபரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.