இலங்கை பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடு என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் அனர்த்தங்களினை மிக வெற்றிகரமாக எதிர்கொள்ளுவதற்கான சிறந்த திட்டம் அவசியமாகும் என ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியரான றிச்சர்ட் ஹய்க் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று அண்மையில் தேசிய உள்ளுராட்சி அதிகார சபைகள் சம்மேளனத்தின் ஆலோசகர் எம்.ஐ. வலீத் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்

ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழகமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்ளுர் கொள்ளைகள் திட்டங்களுக்கு ஏற்ப மிகவும் பயனுறுதி வாய்ந்த வலுவான திட்டம் ஒன்றினை அனர்த்தங்கள் நிகழும் போது அவற்றை தொடர்ச்சியாக எதிர்கொள்ளுகின்ற பிரதேசங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் வரைந்து இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இச்செயலமர்வில் கலந்து கொண்ட சிவில் பிரதிநிதிகளின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் மேற்படி திட்டத்தினை செயலுருப்படுத்த மிகவும் அவசியமாகும் என இலங்கை உள்ளுராட்சி அதிகார சபைகள் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ஹேமன்தி குணகேர தெரிவித்தார்.

இச்செயலமர்வில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்த தெரிவிக்கையில் அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படும் போது பாதிப்பில்லாதவாறு முகம்கொடுக்கலாம் என்பது சுணாமி ஏற்பட்டு 12 வருடங்களாகியும் அனர்த்த முகாமை பற்றிய அறிவு இன்னமும் பொது மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. அதனால் அது தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை குறிப்பாக அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஒலுவில் துறைமுக நிர்மானம் காரணமாக அதிகளவிலான பொரளாதார சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக நிந்தவூர் பிரதேச மீனவர்கள் மற்றும் விவசாயகளுக்கு இத்துறைமுகத்தால் எந்தவிதமான நன்மைகளும் இல்லை மாறாக தீமைகளே அதனூடாக நிகழ்கின்றது. எனவே இத்துறைமுகத்தின் மூலம் ஏற்படுகின்ற கடலரிப்பு மற்றும் உவர்நீர் வயல் நிலங்களுக்குள் உட்புகுதல் என்றுமில்லதவாறு நிகழ்வதாகவும் அதனை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டிலான்தி அமரதுங்க பதிலளித்து கூறுகையில் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதமளவில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பாக கடலரிப்பு மற்றும் ஒலுவில் துறைமுக நிர்மானம் குறித்தும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இச்செயலமர்வில் அரச உத்தியோகத்தர்கள் சிவில் சமூகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.