வெண்ணிலா கபடிகுழு படம்தொடங்கி விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இதுவரை ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் முதல் படமான வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்கள்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றிப்படங்கள்.
இந்தப் படங்களைத்தவிர மற்றவை அனைத்துமே சுமாராக வெற்றியடைந்த படங்கள்தான். வெற்றி வசப்படவிட்டாலும் அனைத்துத்தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்க்கும் வகையிலான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு. அதோடு, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ என்ற பட நிறுவனத்தையும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
தன்னுடைய பேனரில் வெளிவந்த முதல் படமே 50 நாட்களைக் கடந்து வெற்றிபெற்றதால் உற்சாகமடைந்த விஷ்ணு விஷால், தனது அடுத்த தயாரிப்பாக ‘கதாநாயகன்’ எனும் புதிய படத்தை அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப்படம் முடிவதற்குள்ளாகவே ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் 3ஆவது படத்திற்கும் பூஜை போட்டுள்ளார்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய செல்லா, இந்த புதிய படத்தை இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் தவிர கதாநாயகன் படத்தை இயக்கும் முருகானந்தம் இயக்கத்திலேயே மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார் விஷ்ணுவிஷால். ஆக.. ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார்.