வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாக வடக்கு

மாகாண சபையின் ஒரேயொரு பெண் உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பட்ஜெட்டுக்கான அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வடக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள், சபை முன்பாக கவனயீர்ப்பு போரா ட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத் தின் முடிவில் முதலமைச்சரினை சந்திப்பதற்கு என்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஐந்து பேர் மட்டுமே பேரவை செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரினை செயலகத்தின் முன்பாக உள்ள கொட்டகையில் அமர வைப்பதற்கான அனுமதியை பேரவைச் செயலகத்திடம் கோரியிருந்தேன்.

எனினும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு பொலிஸாரும், கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்ளே செல்ல முடியாதவாறு வாசலில் தடுத்து நின்றார்கள்.

ஆனால் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் சிலர், இன்றையதினம் (நேற்று) செயலகம் முன்பாக வருகை தந்து என்னை அழைத்தனர்.

அதற்கு நான், மாகாண சபையில் விவாதம் உள்ளது பின்னர் சந்திக்கின்றேன். எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என அவர்களிடம் கூறினேன்.

அப்போது இருவர் எனக்கு அருகில் வந்து என்னை மிரட்டும் தொனியில் கதைத்திருந்தனர். மேலும் நான் அனுமதி கோரிய போது கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் இன்று (நேற்று), அதிபர் பரீட்சையில் சித்தி யடைந்தவர்கள் சுதந்திரமாக உள்ளே வந்து ள்ளனர். இது தவிர விவாதத்தை பார்வையிட நால்வருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது அநீதியான சம்பவமாகும். எனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதியா? உறுப்பினர் ஒருவருக்குக் கூட பாது காப்பில்லாத நிலைதான் உள்ளது என அவைத் தலைவரைப் பார்த்து அனந்தி சாடினார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் அஸ்மின், இது ஒரு பாரதூரமான விடயமாகும், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நான் உள்ளே வருவதற்கு யாருக்கும் அங்கீகாரம் வழங்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. எனக்கு தெரியாமல்தான் இந்த இரு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

எனினும் உறுப்பினர் அனந்திக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன். நான் யாருக்கும் சார்பாகச் செயற்படவில்லை என அவைத் தலைவர் கூறினார்.