மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் ஊடகங்கள் அவ்வாறான செயற்பாடுகளுக்கு மிக்கியத்துவம் கொடுப்பது குறைவு என சமூக சேவைத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் கா.காண்டீபன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரிவில் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது இலங்கையிலுள்ள அனைத்து முதன்மை ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.

ஒலிம்பிக் பரா விளையாட்டினை மக்களிடத்தே கொண்டு சேர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் எந்தவொரு விடயமும் வெளிக் கொண்டு வரப்படவில்லை.

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் பரா விளையாட்டு நிகழ்வில் இலங்கையிலுள்ள முதன்மை ஊடகங்கள் அனைத்தும் அவ்வாறான நிலைப்பாட்டடையே கடைப்பிடித்தது.

நடைபெற்ற ஒலிம்பிக் பரா விளையாட்டுச் செய்தியினை ஒரு பக்கச் செய்தியாகத்தான் வழங்கியிருந்தார்கள்.

மாற்றுத் திறனாளிகள் எனப்படுவர்கள் எமது சமூகத்தில் இருக்கின்றவர்கள். அவர்களை நாங்கள் தான் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதுதான் எமது கடமை எனத் தெரிவித்தார்.