கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சிகரமாக

நடித்தது பற்றி அப்பட இயக்குநர் சுராஜ் அளித்த பேட்டிக்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கத்தி சண்டை படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இயக்குநர் சுராஜ் அளித்துள்ள பேட்டியில், கமர்ஷியல் படங்களில் கதாநாயகி கவர்ச்சியாகவே நடிக்கவேண்டும். என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர், நடிகையின் உடையை அவருடைய முழங்கால் வரை இருப்பதுபோல கொண்டுவந்தால் நான் அந்த உடையின் உயரத்தைக் குறைக்கச் சொல்வேன்.

நடிகை முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, ரசிகர்கள் இதுபோன்ற உடைகளில் நடிகைகளை காணவே விரும்புகின்றனர். என்று கூறியிருந்தார். சுராஜின் இந்தப் பேட்டிக்கு நடிகை நயன்தாரா முதலில் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் நடிகை தமன்னாவும் இயக்குநர் சுராஜின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குனர் சுராஜ் கூறிய கருத்துகளால் நான் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன். அவர் என்னிடம் மட்டுமல்ல, இந்தத் துறையில் உள்ள அத்தனை பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் நடிகர்கள், நடிப்பினால் ரசிகர்களை ரசிக்க வைக்கவே விரும்புகிறோம். மற்றபடி ஒரு பண்டம் போல எங்களை நடத்தவேண்டியதில்லை. இது 2016. பெண் முன்னேற்றம் குறித்து பேசும் டங்கல் போன்ற ஒரு படத்தின் காட்சியிலிருந்து பாதியில் வந்து இந்த விவகாரத்தை எதிர்கொள்கிறேன்.

11 வருடங்களாக தென்னிந்தியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு விருப்பமான உடைகளில் மட்டுமே நடித்துள்ளேன். பெண்களை அற்பமான முறையில் பேசியதைக் கண்டு வருத்தப்படுகிறேன். சினிமா ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை வைத்து இந்தத் துறையை பொதுமைப்படுத்திவிடவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.