டைரக்டர் சுதா இயக்கத்தில் மாதவன் நாயகனாக நடித்த படம் இறுதிச்சுற்று. பெண்கள் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நாயகியாக நடித்தார். மாதவன் அவருக்கு பயிற்சி கொடுக்கும் கோட்ச் வேடத்தில் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் பெற்றுக்கொடுத்தது. அதையடுத்து, ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்த ரித்திகா சிங் தற்போது, பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ள ரித்திகா சிங்கை அடுத்தபடியாக தமிழில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. அந்த படத்தை அர்ஜூன் நடித்த கர்ணா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய செல்வா இயக்குகிறார். கிரைம் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க ரித்திகா சிங்கிடம் கால்சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வரும் டைரக்டர் செல்வா, ஜனவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.