”கொழும்பே தெரியாத பிரபாகரனுக்கு, கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்து. ஆகவே, குற்றம் இடம்பெற்ற இடத்தில் குற்றவாளிகள் இருந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அதற்கு திட்டம் தீட்டிய குற்றத்திற்கு தண்டனை வழங்க முடியும்” என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் எதிரிகள் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை, யாழ். மேல் நீதிமன்றில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று வழங்கப்பட்டது.

இதன்போது, வழக்கின் 4ம், 7ம் மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன், குற்றச் செயல் இடம்பெற்ற காலப்பகுதியான கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, தமது தரப்பினர் யாழ்.மாவட்டத்திலையே இருக்கவில்லை என்றும், கொழும்பிலேயே இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். அதற்கான சாட்சியங்கள், மன்றில் முற்படுத்தப்பட்டதென்றும் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதிபதி தமது விளக்கத்தில் மேலும் தெரிவித்ததாவது-

”குற்றச் செயலுக்கு உடந்தையாக செயற்பட்டமை மற்றும் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றங்களே, உங்களது தரப்பினர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இக் குற்றங்களை புரிவதற்கு, அவர்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதியில்தான் இருக்க வேண்டுமென்ற நிபந்தனை இல்லை.

கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், கொழும்பே தெரியாத விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உச்ச நீதிமன்றம் 200 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

அவ்வாறே, குற்றச் செயலுக்கு திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருக்கவேண்டும் என்று கிடையாது” என்றார்.