யாழ் போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மருத்துவபீட கற்கை நெறி

உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 8 மாடிகளைக் கொண்ட மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி யாழ். போதனா வைத்தியசாலையில் அமையவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவ பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் இக்கட்டம் அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இக்கட்டிடத் தொகுதியில் மருத்துவ பீட கற்கை நெறிகளுக்கான பல்வேறு பிரிவுகளின் காரியாலய அலகுகளும் மாணவர்களுக்கு கற்கை வசதி வழங்கக் கூடிய அலகுகளும் அமைய உள்ளன.

இக்கட்டிட அமைப்பு வேலைகள் பூரணமாக யாழ் மருத்துவ பீட நிருவாகத்தின் கீழ் அமையும். எனினும் நோயாளர் சேவை பிரிவுகள் இயங்கும் போது அவை முழுமையாக வைத்தியசாலைப் பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் ஒரு தளத்தில் அமைய இருக்கும் சத்திர சிகிச்சைக் கூடம் மற்றும் ஆய்வு கூட வசதி பற்றி கருத்து முரண்பாடுகள் எழுந்தது. இது தொடர்பாக

சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமான ஒர் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் சில ஊடகங்களில் இது குறித்த செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வெளிவந்தன. இக்கட்டடத் தொகுதியைக் கட்டுவதற்கு வைத்தியர்களோ ஏனையவர்களோ முட்டுக்கட்டை ஏற்படுத்தவில்லை.

அத்துடன் இக்கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு அனைத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.