ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சுரேஷ் கல்மாடி,

அபய்சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) ஆயுட்கால தலைவர்களாக நியமிக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருவரையும் நீக்காவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடனான உறவு துண்டிக்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் பகிரங்கமாக எச்சரித்தது. எதிர்ப்புக்கு பணிந்த சுரேஷ்கல்மாடி, ஆயுட்கால தலைவர் கவுரவத்தை மறுத்து விட்டார். ஆனால் 53 வயதான சவுதாலா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.ஓ.ஏ தலைவருக்கு நான் தனியாக கடிதம் எழுதியுள்ளேன். அதில் எனது நியமனம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் விவாதிக்கும்படி கோரியுள்ளேன். எனது நியமனத்துக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆட்சேபனை தெரிவித்தால், இந்திய விளையாட்டின் நலன் கருதி எனக்கு வழங்கப்பட்ட அந்த பதவியை துறக்க தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இன்றுக்குள் பதில் அளிக்கும்படி ஐ.ஓ.ஏ.-க்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.