அக்கப்போர்கள் இல்லாமல் ட்விட்டர் பதிவுகள் கிடையாது.

அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள டங்கல் படம் உலகம் முழுக்க வசூலைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஏற்கெனவே தமிழில் டப் ஆகிவிட்ட நிலையில் தமிழில் ரீமேக் ஆனால் எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்கிற விவாதம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழில் அஜித் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று நீத்து சந்திரா பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் திடீரென சர்ச்சை கிளம்பியது. அஜித் ஒரு விளையாட்டு வீரர். அவரால் எந்த வேடத்தையும் சிறப்பாக செய்யமுடியும் என்று தன் வாதத்தை முன்வைத்தார் நீத்து சந்திரா. இதனால் சூர்யா ரசிகர்கள், நீத்துவின் கருத்தை எதிர்த்து பதிவுகளை வெளியிட்டார்கள்.

சூர்யா குறித்து கூறிய நீத்து சந்திரா, சூர்யாவால் இளவயது வேடத்தைச் சிறப்பாகச் செய்யமுடியும். நான் அவரை அந்த வேடத்தில் காணவே விரும்புகிறேன். அவருடைய நடிப்புத்திறமையை நான் அறிவேன். எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு என்றார். ஆனாலும் அவருடைய விளக்கத்தை சூர்யா ரசிகர்கள் சிலர் ஏற்கவில்லை. வெவ்வேறு விதமான காரணங்களுடன் பதில் அளித்தார்கள். சிலர் அஜித்தையும் வேறுவிதமாகப் பேசினார்கள். இதனால் கோபமடைந்த நீத்து சந்திரா, யாரும் எந்த ஒரு நடிகரைப் பற்றியும் தவறாகப் பேசவேண்டாம். என் தளத்தில் அதற்கு இடமில்லை. எல்லோரும் கடுமையான உழைப்பாளிகள் என்றார்