தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 286 ரன்களும், இலங்கை அணி 205 ரன்களும் எடுத்தன. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 90.5 ஓவர்களில் 406 ரன்களை எட்டியபோது 6-ஆவது விக்கெட்டாக டி காக் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணி டிக்ளேர் செய்தது. கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைத் தரப்பில் டி சில்வா 2 விக்கெட் எடுத்தார்.

488 ரன்கள் இலக்கு: இதையடுத்து 488 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் மேத்யூஸ் 58, டி சில்வா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை வெற்றி பெற இன்னும் 248 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் அந்த அணி தோற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.