நெடுந்தாரகை ஐனவரி 9ம் திகதி யாழ் குறிகட்டுவானை வந்தடையும்

நெடுந்தாரகைப் படகு ஜனவரி 05ஆம் திகதி மாலையில் டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு 9ஆம் திகதி யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியினை அடையவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார்.

குறிகட்டுவான் நெடுந்தீவு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் புதிதாக ஓர் படகு உருவாக்கப்பட்ட திட்டமிடப்பட்டது.

இவ்வாறு வடிவமைக்கப்பட உள்ள படகினை அமைக்கும் பணியினை கொழுப்பில் உள்ள படகு கட்டும் நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் புதிய படகு அமைக்கப்பட்டது. இதற்கான இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் பிரகாரம் குறித்த படிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இவ்வாறு நிறைவடைந்த பணிக்குரிய படகே எதிர்வரும் 5ம் திகதி கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து கடல் மார்க்கமாக பயணித்து யாழ்ப்பாணம் வருகின்றது.

இதன் படி குறித்த படகு 9ஆம் திகதியே குறிகட்டுவானை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அ.பத்திநாதன் தெரிவிக்கும் போது,

நெடுந்தாரகையின் ஓட்டுநர் உள்ளிட்ட பணிக்காக எம்மால் கொழும்பு துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மாபொல திறுவனத்தில் 6 பணியாளர்களை இணைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அவர்கள் பயிற்சினை நிறைவு செய்து யாழிற்கு திரும்பியுள்ளனர். திரும்பியுள்ள 6 பணியாளர்களையும் செயல்முறைப் பயிற்சிக்காக வட தாரகையில் இணைத்து ஓட்டும் பயிற்சிக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நெடுந்தாரகை படகினை உத்தியோக பூர்வாக கையளிக்கும் நிகழ்வுகள் ஜனவரி இறுதிப்பகுதியில் இடம்பெற ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

குறித்த நெடுந்தாரகையினை கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் கொண்டுவருவதற்கான அனுமதிக்காக கடற்படைக்கு விண்ணப்பித்திருந்தோம். அதற்கான அனுமதிகளும் கிடைத்துள்ளன எனவும் அ.பத்திநாதன் குறிப்பிட்டுள்ளார்.