டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் 2 வயது ஆண் குழந்தையின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Gurgaon நகரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திலீப்- திவ்யா தம்பதியினர் தங்களது 2 வயது குழந்தை ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளனர்.

திவ்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ராஜா என்ற நபர் திவ்யாவின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

பலமுறை அவரிடம் சென்று தனது காதலை தெரியப்படுத்திய ராஜா, நாம் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய்விடலாமா என கேட்டுள்ளார். இதனால் கோபம் கொண்ட திவ்யா, இதுகுறித்து தனது கணவர் திலீப்பிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் திலீப்பிற்கும், ராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்படவே, அந்த இருப்பிடத்தை விட்டு திலீப் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 1 வருடம் கடந்துவிட்டபோதிலும் ராஜாவால் திவ்யாவை மறக்க முடியவில்லை. மேலும் திவ்யாவின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையும் மனதில் இருந்த காரணத்தால், நாம் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டோமே என கோபம் கொண்டுள்ளார்.

இதனால், திவ்யாவின் 2 வயது மகன் ஆதித்யாவை டிசம்பர் 12 ஆம் திகதி கடத்தி அவனது முகத்தில் ஆசிட் வீசி ஊரின் ஒதுக்குப்புறத்தில் தூக்கிவீசியுள்ளார். சிறுவயது குழந்தை என்றுகூட பாராமல் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

குழந்தையை காணவில்லை என பரிதவித்த திலீப் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், குற்றுயிராய் கிடந்த ஆதித்யாவின் உடல் பொலிசாரல் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, ஆதித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தாய் மீது ஆசை கொண்ட காரணத்தால், பச்சிளம் குழந்தையை இப்படி கொடூரமாக தண்டித்த ராஜாவை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.