நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பலர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அவர்களின்

குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்ககோரி மதுரையில் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறினார்.

தஞ்சாவூரில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மந்திரி, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்து அரசு டமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது மத்திய காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இப்போது ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசு அண்டை நாடுகளுடன் உறவுடன் இருக்க வேண்டும் என்று கூறி, மீனவர்களின் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடமையாக்கினால் இந்தியா-இலங்கை நட்புறவு பாதிக்கப்படும்.

காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி வளர்ப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிசம்பர் 15-ந்தேதி பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நெற்பயிர்கள் கருகியதன் காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் பலர் மாரடைப்பால் இறந்துள்ளனர். தற்கொலையும் செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிற ஜனவரி 6-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மதுரையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.