பிரதமருக்கு எதிராக அவதூறு தேசிய பாதுகாப்பு படையின் இணையதளம் முடக்கம் !

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு

அதிரடி பணிகளுக்காக தேசிய பாதுகாப்பு கமாண்டோ படை (என்.எஸ்.ஜி.) உருவாக்கப்பட்டு உள்ளது. கருப்பு பூனைப்படை என அழைக்கப்படும் இந்த படையினருக்காக தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு, அதை என்.எஸ்.ஜி. தலைமை அலுவலகம் பராமரித்து வருகிறது.

இந்த இணையதளத்தில் நேற்று காலையில் மர்ம கும்பல் ஒன்று ஊடுருவி அதை முடக்கும் பணிகளை மேற்கொண்டது. ‘அலோண் இன்ஜெக்டர்’ என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்ட அந்த கும்பல், இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வாக்கியங்களையும் பதிவு இட்டு இருந்தது.

இதை அறிந்த என்.எஸ்.ஜி. அதிகாரிகள் உடனே அந்த கும்பலின் முயற்சிகளை தடுத்து நிறுத்தினர். பாகிஸ்தான் ஆதரவு கும்பல்தான் இந்த அவதூறு செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதுடன், முடக்கப்பட்ட இணையதளத்தை மறுசீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.