பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் மீது ‘ஷூ’ வீச்சு!

அரியானா மாநிலம் ரோதக் என்ற இடத்தில்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை கண்டித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர், கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசினார். ஆனால் அந்த ஷூ அவர் மீது விழவில்லை. உடனே ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த விகாஷ் (வயது 26) என்பதும், பட்டதாரியான அவர், வேலை எதுவும் இன்றி இருந்தார் என்றும் தெரியவந்தது. அவர் மனநிலை தெளிவாக இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியதால் அவர் ஷூ வீசியதாகவும், போலீசார் தெரிவித்தனர்.