பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க வங்காளதேச எல்லையில் ‘லேசர்’ சுவர்கள்!

இந்தியாவும் வங்காளதேசமும் 4,096 கி.மீ எல்லையை

பகிர்ந்து கொள்கின்றன. இதில் மேற்கு வங்காளத்தில் மட்டுமே 2,216.7 கி.மீ. வருகிறது. இதில் பெரும்பாலான பகுதியில் முறையான வேலிகள் அமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வங்காள தேச தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பயங்கரவாதிகள் வங்காள தேசத்தின் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாதுகாப்பற்ற எல்லை பகுதிகளில் உடனடியாக வேலிகள் அமைக்க வேண்டும் என எல்லை பாதுகாப்பு படையினர் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஆற்றுப்படுகையையொட்டி உள்ள எல்லை பகுதிகளில் ‘லேசர்’ கதிர் சுவர்களும், ஆட்கள் இல்லாத எல்லை பகுதிகளில் ‘ஸ்மார்ட் சென்சார்’ கருவிகளும் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கு ஒப்புதல் அளித்து உள்ள மாநில அரசு லேசர் சுவர்கள், ஸ்மார்ட் சென்சார் கருவிகள் அமைப்பதற்கான இடங்களை ஆர்ஜிதம் செய்து அவற்றை எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. அவசர அடிப்படையில் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.