ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்கு

இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான காலப் பகுதியே எஞ்சியிருக்கும் இவ்வேளையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாட்டின் அரசியல் களத்தில் சர்ச்சையான வாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதகமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற போதிலும், வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ்க் கட்சிகள் பிரதிகூலமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.

உத்தேச அரசியல் யாப்பு நிறைவேறும் வரை தமிழ்த் தரப்புகள் பொறுமை காக்க வேண்டுமென்பது தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நிலைப்பாடாக உள்ளது.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரதானமான அரசியல் உரிமைக் கோரிக்கைகளை உத்தேச யாப்பு கொண்டிருக்கப் போவதில்லையென்பது தெளிவாகத் தெரிகின்ற போதிலும், அரசியல் தீர்வு விடயத்தில் இன்றைய அரசாங்கத்துக்கு வாய்ப்பொன்றை அளித்துப் பார்க்க வேண்டுமென்றே சம்பந்தன் கருதுவதாகத் தெரிகிறது.

அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்து வருகின்ற நல்லிணக்கத்தைப் பார்க்கின்ற போது, புதிய அரசியலமைப்பை தமிழர் பிரச்சினைக்கான முதல்கட்டத் தீர்வாக சம்பந்தன் தரப்பு ஏற்றுக் கொள்ளக் கூடுமென்றே தோன்றுகிறது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த அணியினர் ஒருவித அச்சத்தை விதைத்து வருகின்றனர்.

இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், பௌத்த சாசனத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையிலேயே புதிய அரசியல் சாசனம் அமையப் போவதாக மஹிந்த அணியினர் தற்போது தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பையோ அல்லது சமஷ்டித் திட்டத்தையோ புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கவில்லையென்றும், பௌத்த சாசனத்துக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு ஏற்படுத்தும் விதத்தில் புதிய யாப்பில் எதுவுமே உள்ளடக்கப்படவில்லையென்றும் அரசாங்க தரப்பில் உறுதியாகக் கூறப்படுகின்ற போதிலும், மஹிந்த தரப்பினர் தங்களது பிரசாரத்தைக் கைவிட்டு விடுவதாகத் தெரியவில்லை.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி, மக்களைத் தங்களது பக்கம் வசீகரிப்பதற்காகவே மஹிந்த தரப்பினர் அரசியலமைப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனரென்பது நன்றாகவே தெரிகிறது.

கண்டியிலுள்ள பௌத்த மகாநாயக்கர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் சந்தித்த பின்னரும் கூட உத்தேச யாப்பு தொடர்பாக மீண்டும் விளக்கத்தை அளித்திருக்கின்றார்.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்கும் வகையிலேயே யாப்பு அமைந்திருக்குமென ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

எனினும் மஹிந்த அணியினர் உத்தேச யாப்பு மீதான விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளப் போவதில்லையென்றே தெரிகின்றது.

வடக்கு, கிழக்கைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் முற்படுவதாகவே மஹிந்த விசுவாசிகள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

தென்னிலங்கை இனவாதிகள் இவ்வாறு கூறுகின்ற அதேசமயம், புதிய அரசியலமைப்பு தொடர்பாக வடக்கு, கிழக்குத் தமி்ழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையே இப்போது அதிகரித்துள்ளது.

இந்திய_இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தனியான மாகாண சபையாக இயங்கிய போதிலும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் தற்போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல் நடைமுறைக்கு வரப் போகின்ற புதிய அரசியலமைப்பானது நீதியான தீர்வைத் தரப் போவதில்லையென்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அதேவேளை வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரதான அரசியல் கோரிக்கையான சமஷ்டித் தீர்வை உள்ளடக்காத அரசியல் யாப்பினால் ஆகி விடப் போவது எதுவுமில்லையென்பது அம்மக்களின் அபிப்பிராயம்.

வடக்கு, கிழக்கு இணைப்பையும், சமஷ்டித் தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கூட வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவ்விரண்டு யோசனைகளும் உத்தேச அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவில்லையென்பது தெளிவாகிவிட்டது.

இணைப்பும் சமஷ்டியும் இல்லையென அரசாங்க தரப்பினரே வெளிப்படையாகக் கூறுகின்ற போது, உத்சே யாப்பு மீது தமிழ் மக்கள் திருப்தி கொள்வரென எதிர்பார்க்க முடியாது.

இனப் பிரச்சினைக்கான குறைந்த பட்சத் தீர்வையே புதிய அரசியலமைப்பு தரப் போகின்றது என்பது உண்மை.

இவ்வாறிருக்கையில் தென்னிலங்கையின் இனவாதக் குரல்களும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைக் குரலும் மறுதிசையில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

குறைந்த பட்சத் தீர்வைத் தரப் போகின்ற புதிய அரசியலமைப்பு நிறைவேறுவதைக் கூட தென்னிலங்கையின் இனவாதக் கும்பல்கள் அனுமதிக்குமா என்பதே இப்போதுள்ள பிரதான அச்சம்.

அரசாங்கத்துக்கு எதிரான சிங்களக் கட்சிகள் எழுப்புகின்ற கோஷத்தைப் பார்க்கின்ற போது உத்தேச யாப்பு மீது அவநம்பிக்கையே தோன்றுகின்றது.

மறுபுறத்தில் தமிழ்க் கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு தோன்றுவதற்கான அறிகுறிகளை கொஞ்சமேனும் காண முடியவில்லை.

தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வர முடியாத பட்சத்தில் வடக்கு, கிழக்குக்கான எந்தவொரு தீர்வையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியம் அடியோடு கிடையாது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து வெளிவருகின்ற கருத்துக்கள் அரசியல் தீர்வுக்கு உடன்பாடானதாகத் தெரியவில்லை.

முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு தோன்றுவதற்கான சாத்தியம் இல்லையென்பது போலவே தோன்றுகின்றது.

இலங்கையில் அரசியல் களத்தில் உத்தேச அரசியல்யாப்பு இவ்வாறுதான் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்க தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையான கருத்துக்களைத் தந்து கொண்டிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்வுக்கான பயணம் நீண்டதாகத் தொடரும் போலவே தெரிகிறது.