லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர், செயலாளர் நீக்கம்!

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாத

விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் செயலாளரை பதவி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

லோதா கமிட்டி விவகாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 18-ந் தேதி உத்தரவிட்டது.

‘70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக இருக்க முடியாது. ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக்கூடாது. நிர்வாகியாக ஒருவர் அதிகபட்சம் 9 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். அதிலும் ஒவ்வொரு 3 ஆண்டு கால பதவி காலத்துக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டு’ ஆகியவை உள்ளிட்ட சில சிபாரிசுகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுப்பதால் தங்களால் அமல்படுத்த முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இழுத்தடிப்பு

இதற்கிடையில் பரிந்துரைகளை அமல்படுத்தாததால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று லோதா கமிட்டி சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 3-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு கெடு விதித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எதுவும் எடுக்காமல் இழுத்தடித்தது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடையதாக இருக்க மத்திய தலைமை கணக்கு அதிகாரியின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசு தலையீடுவது போல் ஆகும் என்று தலைவர் அனுராக் தாகூர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி முட்டுக்கட்டை போட முயற்சித்தார். அனுராக் தாகூரின் இந்த மறைமுக செயலை கடந்த மாதம் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் சாடினார்கள்.

தலைவர், செயலாளர் அதிரடி நீக்கம்

இந்த நிலையில் லோதா கமிட்டி மனு மீதான வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டனர்.

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தும் விஷயம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியதை மறைத்து கோர்ட்டுக்கு பொய்யான தகவலை தெரிவித்த அனுராக் தாகூருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினர். அவர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக பதவிக்கு சரியான நபர்களை தேர்வு செய்ய மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் 2 வாரத்துக்குள் பெயர்கள் பரிந்துரை பணிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அதுவரை சீனியர் துணைத்தலைவர் மற்றும் இணை செயலாளர் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

லோதா கமிட்டி சிபாரிசுகளை ஏற்காத கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

இந்த வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘தனிப்பட்ட போராட்டம் அல்ல’
அனுராக் தாகூர் கருத்து

தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அனுராக் தாகூர் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் இது தனிப்பட்ட போராட்டம் அல்ல. இது விளையாட்டு அமைப்புக்கான சுயாட்சி குறித்த போராட்டமாகும். எல்லா குடிமகன்களையும் போல் நானும் சுப்ரீம் கோர்ட்டை மதிக்கிறேன். ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மேற்பார்வையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பாக செயல்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருதினால் அதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டின் நலன், விளையாட்டு அமைப்பின் சுயாட்சி ஆகியவை குறித்த எனது அர்ப்பணிப்பு எப்பொழுதும் நிலைத்து இருக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றியதை கவுரவமாக கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது’ என்றார்.

‘பதவி நீக்கம் செய்யப்பட்டதில் வருத்தம் இல்லை’
அஜய்ஷிர்கே சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து அஜய் ஷிர்கே கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

நீக்கம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாகும். செயலாளர் பதவியில் இருந்து நான் நிறுத்தப்பட்டு இருக்கிறேன். இதைவிட எளிமையாக என்ன சொல்ல முடியும். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் எனது பணி முடிவு பெற்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். உறுப்பினர்களின் முடிவுக்கு தகுந்தபடியே செயல்பட முடியும். பதவி மீது எனக்கு தனிப்பட்ட பிடிப்பு எதுவும் கிடையாது. கடந்த காலங்களில் நான் தானாகவே பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். என்னை போட்டியின்றி தேர்வு செய்ததால் மீண்டும் பதவிக்கு வந்தேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டால் பதவியில் இருந்து நிறுத்தப்பட்டு இருக்கிறேன். இது முற்றிலும் நல்லது தான். பதவி நீக்கம் செய்யப்பட்டதில் எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது. இந்த நீக்கத்தால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பலம் குறையாது.

இவ்வாறு அஜய் ஷிர்கே கூறினார்.

கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி -ஆர்.எம்.லோதா

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர், செயலாளர் நீக்கம் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கருத்து தெரிவிக்கையில், ‘லோதா கமிட்டி பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதும், அதனை கண்டிப்பாக அமல்படுத்தி இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட வேண்டியது தான். தற்போது நடந்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதனை அனைவரும் ஏற்று நடந்தே ஆக வேண்டும். சட்டத்தின் மாட்சிமை தனது பணியை செய்துள்ளது. இந்த உத்தரவு கிரிக்கெட் ஆட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் கிரிக்கெட் ஆட்டம் மேலும் வளம் பெறும். நிர்வாகிகள் வருவார்கள், போவார்கள். ஆனால் விளையாட்டு எப்போதும் நிலைத்து நிற்கும்’ என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன்சிங் பெடி அளித்த பேட்டியில், ‘இது ஒரு மைல்கல் தீர்ப்பாகும். இந்திய விளையாட்டு துறைக்கு குறிப்பாக கிரிக்கெட்டுக்கு சிறப்பான செய்தியாகும். இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல பலனை அளிக்கும். இதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.