துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில்

உள்ள பிரபல இரவு நேர விடுதியில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக 600–க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தினர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய போலீசார் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கொலையாளியை அடையாளம் காண, தாக்குதலின் போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

அதில், தாக்குதல் நடத்திய நபர் கையில் துப்பாக்கியுடன் இரவு விடுதிக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது. வீடியோவில் பதிவாகியிருக்கும் கொலையாளியின் உருவத்தை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ். அமைப்பு நேற்று அறிவித்தது.