ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி

ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு அமைப்பு சார்பில் டெல்லியில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தலைநகர் டெல்லியில் நேற்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு கழக அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும் வரையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளில் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு கழகம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

அவசர சட்டம் இயற்றும் வரை…

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்வதாக கூறி வரும் மத்திய அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டில் மிருக வதை எதுவும் இல்லாத போதிலும் கூட ‘பீட்டா’ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் காளைகளை வதைப்பதாக பொய்யான தகவல் கூறி தடை பெற்றுக்கொண்டார்கள்.

ஏதாவது தவறு நடந்தால் கண்டிப்பாக தண்டிக்கலாம். ஆனால் ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்வது நல்லது அல்ல. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக மத்திய அரசு அவசர சட்டம் இயற்றும் வரை நாங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போம்.

டெல்லியில் இருந்து பண்பாட்டு அமைப்புகள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.