அதிமுக பொதுச் செயலாளராக கடந்த சனிக்கிழமை

சசிகலா நடராஜன் பொறுப்பேற்றுக் கொண்டதும், அவர் தனது அரசியல் அரங்கில் முதல் உரையையாற்றினார். அந்த உரையானது மிக சிறப்பாக தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது என்பதை அனைத்து அரசியல் பார்வையாளர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏனெனில் மிகவும் மெனக்கெட்டு, உளவியலோடு தொடர்புபடுத்தி உரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சில, பல நாட்கள் தேவைப்பட்டிருக்கும்.

தயாரிக்கப்பட்டது
இந்த உரை தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம், சசிகலா தனது உரையின்போது முழுக்க முழுக்க எழுதி வைத்த தாளை படித்துதான் பேசினார். ஜெயலலிதா சாவு குறித்த சர்ச்சைகள், பாஜகவின் தலையீடுகள், அதிமுக அடித்தட்டு தொண்டர்களை கவருதல் என பல தரப்பையும் நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் சசிகலா பேச்சு அமைந்திருந்தது.

தனக்கே தகுதி
இதில் கட்சி தலைமைக்கு தான்தான் தகுதியான நபர் என்ற வாதத்தை முன் வைக்கும் வரிகளும் முக்கிய இடம் பிடித்திருந்தது. அதிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் ஜெயலலிதாவின் வாரிசாக வர வேண்டும் என்று அதிமுக அடிமட்ட தொண்டர்கள் பலர் கோரிக்கை வைத்துவரும் நிலையில், அவரைவிட தானே தகுதியானவர் என்பதை உணர்த்த வாதங்களை முன் வைத்தார் சசிகலா.

நலம் விரும்பி
“அக்கா கோட்டைக்கு போய்ட்டீங்களா.. அக்கா மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்யனும்..” என்றெல்லாம் தான் ஜெயலலிதாவிடம் கேட்பது வழக்கம் என குறிப்பிட்ட சசிகலா, தான்தான், ஜெயலலிதாவின் நலம் விரும்பி என்பதை அந்த இடத்தில் பதிவு செய்தார். மேலும் 29 வயதில் ஜெயலலிதாவிடம் தோழியாக இணைந்ததாகவும், தற்போது தனக்கு 62 வயது என்பதையும் பேச்சில் சுட்டிக் காட்டி தனது இளமை ஆயுட் காலம் முழுவதையும், ஜெயலலிதாவின் நலனுக்காகவே ‘தியாகம்’ செய்ததை போன்ற தோற்றத்தை பேச்சு உருவாக்கியது.

வேர் நான் தான்
“கனி தெரியும், காய் தெரியும் இலை தெரியும், பூ தெரியும் வேர் தெரியாது..” என்று பேசிவிட்டு சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார் சசிகலா. ஜெயலலிதா வெற்றிக்கான அந்த வேர் தான்தான் என்பதை குறிப்பால் உணர்த்திய சசிகலா, பேச்சை தொடரும்போது, அந்த வேர் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் என சொல்லி முடித்தார். ஆனால் அவர் பேச்சை நிறுத்திய வினாடிகளில், திடீரென ஆவேசமாக கரகோசங்களை எழுப்பிய அதிமுக நிர்வாகிகள், அவரது பேச்சின் உள் அர்த்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டிருந்தனர்.

33 வருடங்கள் வாழ்க்கை
சில வினாடிகள் பார்த்தவர்கள், சில முறை சந்தித்தவர்கள், சில நிமிடங்கள் பேசியவர்களுக்கே, ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியை கொடுத்திருக்குமானால், 33 ஆண்டுகள் கூடவே இருந்த எனக்கு எப்படி இருக்கும் என்று பேசிய சசிகலா, தனக்குத்தான் ஜெயலலிதா மீது அதிக உரிமை உள்ளது என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

தீபாவுக்கு சிக்னல்
இந்த வாதங்கள் அனைத்தையும் சசிகலா, தீபாவுக்கு கொடுத்த சிக்னல்களாகவே பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனெனில் தான்தான் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு காலம் வாழ்ந்து, சாப்பாடு முதல்கொண்டு எல்லாவற்றையும் பங்கிட்டு கொண்டதாகவும், வேறு யாரும் அவருடன் இருந்திருக்கவில்லை என்பதும் தீபாவுக்கான சிக்னல்தான் என்கிறார்கள். சில வினாடிகள் பேசிக்கொண்டவர்களே ஜெயலலிதா இறந்ததற்காக அதிர்ச்சியடைகிறார்கள் என்றால்… என்று கூறியதன் மூலமும் அதை உறுதி செய்துள்ளார் சசிகலா.

தீபாவுக்கு செக்
மேலும் ஜெயலலிதாவை போன்ற குரல், தோற்றம் கொண்டவர் தீபா என்பதால் அவரது வடிவத்தில் ஜெயலலிதாவை அதிமுக அடிமட்ட தொண்டர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதாவை போன்ற பச்சை நிற சேலை, சிகை அலங்காரம், பொட்டு, அவரது கார், எம்ஜிஆர் பாடல் வரிகளை சுட்டிக் காட்டுவது என சகலத்தையும் பிரயோகப்படுத்தியுள்ளார் சசிகலா என்கிறார்கள். தீபாவுக்கு பெரும் சவால் முன் வைக்கப்பட்டாகிவிட்டது. இதை தீபாவால் தனது அத்தையை போன்ற தீரத்தோடு சமாளிக்க முடியுமா? அல்லது, ஒதுங்கி நிற்பாரா என்பதை வரும்காலம்தான் உலகத்திற்கு எடுத்துச் சொல்லும்.