பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானவ் தீவுப்பகுதியில் உள்ள கொட்டபட்டா மாவட்டத்தில் கிடாபவான் என்ற நகரில் மிகப்பெரிய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலையில், பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் சிறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சிறைக்காவலர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து சிறைக்காவலர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையின் போது சிறைக்காவலர் ஒருவரின் உடலில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கைதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சிறையில் நீடித்த இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் சிறையின் பின்பகுதிக்கு சென்று தங்களுக்குரிய படுக்கைகளை மலை போல் குவித்து அதன் மூலம் ராட்சத மதில் சுவரில் ஏறி, வெளிப்புறமாக குதித்து தப்பினர்.

150-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடி விட்டதாக சிறைக் காப்பாளர் தெரிவித்தார். மேலும் அவர், குறிப்பிட்ட பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்த கைதிகள் பலர் இந்த சிறையில் இருப்பதால், அவர்களை விடுவிக்கும் நோக்கில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்புவதாகவும் கூறினார்.

பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் மற்றும் போலீசார், தப்பி ஓடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதுவரை 6 கைதிகள் பிடிப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.