துருக்கி நாட்டில் 39 பேரை பலிகொண்ட இரவு விடுதி தாக்குதலில், கொலையாளி அடையாளம்!

துருக்கி நாட்டில்,

இஸ்தான்புல் நகரில் உள்ள சர்வதேச இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. பயங்கரவாதி ஒருவர் அங்கு புகுந்து சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அபிஸ் ரிஸ்வி, குஷி ஷா என்ற 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு, அந்த பயங்கரவாதி தப்பினார். அவரை தேடிப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் அங்கு முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பினர் 5 பேர் நேற்று சிக்கினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 14 பேர் பிடிக்கப்பட்டு போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி யார் என அடையாளம் காணப்பட்டு விட்டதாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மெவ்லுட் காவுசொக்லு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதே நேரத்தில் அந்த பயங்கரவாதியைப் பற்றிய தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

வெகு விரைவில் அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.