ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால்,

அதுகுறித்து சி.பி.ஐ. தலைமையில் மருத்துவ நிபுணர்கள் கொண்டு ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மேலும் இரு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை 9–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நீதிபதிக்கு சந்தேகம்
முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5–ந் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என்றும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் உள்ளது என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யாருக்கும் தெரியாது
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஞானசேகரன் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

செப்டம்பர் 22–ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரை ஆஸ்பத்திரியின் உள்ளே என்ன நடந்தது? என்பது வெளிநபர்கள் யாருக்கும் தெரியாது. அவர் நல்லமுறையில் தேறி வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிவித்தது. ஆனால் நிலைமை திடீரென தலை கீழாக மாறிப்போனது. அவருக்கு டிசம்பர் 4–ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. பின்னர், டிசம்பர் 5–ந் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார் எனக்கூறியது.

பிரதமர் இரங்கல்
ஆனால், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, அதாவது இரவு 11.09 மணிக்கே பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு விட்டார்.

அதேபோல, டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் பர்காதத் என்பவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ள இ–மெயிலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கடந்த டிசம்பர் 17–ந் தேதி வெளிவந்த ‘தெஹல்கா’ பத்திரிகை செய்தியை குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளன.

தமிழகத்தின் சொத்து
75 நாட்களாக ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரை சந்திக்க யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை. எய்ம்ஸ் மற்றும் லண்டன் டாக்டர்கள் கூட உண்மை நிலை குறித்து வாய் திறக்கவே இல்லை. ஜெயலலிதாவின் இறப்பு, ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்தும் நோக்கில் நடந்துள்ளதாக பல்வேறு சந்தேகங்கள் உருவாகியுள்ளன.

ஜெயலலிதா தனிப்பட்ட நபர் கிடையாது. அவர் தமிழகத்தின் சொத்து. அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. உடல் அடக்கத்தின்போது கால்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல் பரவுகின்றன.

உண்மை வெளிவரும்
எனவே சி.பி.ஐ. தலைமையில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் அவரது மரணம் குறித்த எல்லா உண்மைகளும் வெளியில் வரும்.

அதுபோல செப்டம்பர் 22–ந் தேதி முதல் டிசம்பர் 5–ந் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கைகளை தனித்தனியாக தாக்கல் செய்ய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தள்ளிவைப்பு
அதேபோல டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பல சந்தேகங்கள் தமிழக மக்கள் மத்தியில் உள்ளன. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கி, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே ஜோசப் தொடர்ந்த வழக்கு 9–ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளையும் 9–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.