தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து

வீச்சாளர் 29 வயதான கைல் அப்போட் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளார். அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹாம்ப்ஷைர் அணிக்காக விளையாட 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இனி முழுக்க முழுக்க அந்த அணிக்காக ஆடுவார். நேற்று நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்டே, தென்ஆப்பிரிக்க அணிக்காக அவர் ஆடிய கடைசி சர்வதேச போட்டியாகும். அவரை தொடர்ந்து தங்களது அணியிலேயே நீடிக்க வைக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தவறி விட்டது.

இதே போல் தென்ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 36 ஒரு நாள் போட்டிகளில் ஆடியவரான முன்னணி பேட்ஸ்மேன் ரைலீ ரோசவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறார். அவரும் இதே கவுண்டி அணிக்காக ஆடுவதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதையொட்டி 27 வயதான ரோசவ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேற இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அப்போட், ரோசவின் முடிவு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இருவரும் இனி தேசிய அணிக்கான தேர்வில் பரிசீலிக்கப்படமாட்டார்கள் என்று தென்ஆப்பிரிக்க வாரியம் கூறியுள்ளது