ஊழல் வழக்கு அரசியல் சாசன கோர்ட்டில் தென்கொரிய அதிபர் மீது விசாரணை ஆரம்பம்!

தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் அதிபராக

பதவி வகித்து வந்த பார்க் கியுன் ஹைக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வழிசெய்யும் குற்ற விசாரணை தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 234 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அதிபர் பார்க் கியுன் ஹை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அந்நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு மூலம் இதன் மீது விசாரணை நடத்தி பார்க் கியுன் ஹை அதிபர் பதவியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று அரசியல் சாசன கோர்ட்டில் பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது.

வழக்கு விசாரணையில் பார்க் கியுன் ஹையின் வக்கீல்களோடு செனூரி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வக்கீல்களாக ஆஜராகினர். அவர்கள் “பார்க் கியுன் ஹை மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை” எனவும், “எதிர்க்கட்சிகளின் கூட்டு சதி” எனவும் வாதாடினர்.

அதே சமயம், அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குவான் சியோங் டாங், “பார்க் கியுன் ஹை அரசியலமைப்பினையும், குற்றவியல் சட்டங்களையும் மீறி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார்” என வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது பார்க் கியுன் ஹை கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை என்பதும், நீதிபதிகள் அவரை ஆஜர் ஆகும்படி வற்புறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.