ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரிய சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம்

குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிகலா புஷ்பா மற்றும் தெலுங்கு யுவசக்தி அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிரவண் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சி.பி.ஐ. விசாரணை தேவை

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பரவலாக உள்ளதால் அவர் இறப்பதற்கு முன்பு அவருடைய உடல்நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை விரிவான முறையில் அறிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக் கல் செய்ய உத்தரவிட வேண்டும். உறவினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் எழுப்பும் சந்தேகங்களின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சந்தேகத்துக்குரிய மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கடந்த செப்டம்பர் 22-ந் தேதியில் இருந்து டிசம்பர் 5-ந் தேதி வரை தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கிலும் சொத்துக்குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் வரை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மற்றும் அவருடைய சகாக்களின் பினாமி சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலா புஷ்பா

இதேபோல், டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதில் இருந்து அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தள்ளுபடி

இந்த இரு மனுக்களும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் சார்பில் மனுதாரர் வக்கீல் சிரவண் குமார் ஆஜரானார். சசிகலா புஷ்பா தரப்பில் சதீஷ் டம்டா ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இதேபோன்ற ஒரு மனு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த மனுக்களை விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர். தாங்கள் ஐகோர்ட்டை அணுகுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மனுதாரர்கள் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வற்புறுத்தினால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வக்கீல்கள் நீதி பதிகளிடம் தெரிவித்தனர்.