குப்பைவாளியில் நிரப்பப்பட்ட நீரைக் குடிக்கிறோம்! ஈழ அகதிகள்!

பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நூற்றுக்கணக்கான புகலிட கோரிக்கையாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையிலிருந்து சென்ற தமிழ் அகதிகளும் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இருக்கின்ற நிலையில், தற்போது அவர்கள் எதிர்நோக்கியுள்ள அவல நிலை குறித்து அவுஸ்திரேலியா நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்படி, “குப்பை வாளியில் நிரப்பப்பட்ட நீரைக் சேகரித்து வைத்து குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், தமக்கு உரிய மருத்துவ வசதி இல்லையெனவும் கூறியுள்ளனர்.

மேலும், உணவு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள எதுவும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். எல்லா வகையிலும் முடக்கப்பட்டிருக்கின்றோம். கடந்த 31ஆம் திகதி முதல் எங்களை முற்றிலுமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

வெறும் கம்பிக் கூடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பலரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூ கினியிலுள்ள மனுஸ்தீவில் புகலிட கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்ட நிலையில், அங்கிருந்த புகலிட கோரிக்கையாளர்களை லொரேன்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

எனினும், மனுஸ்தீவு தடுப்பு முகாமில் இருக்கும் புகலிட கோரிக்கையாளர்கள் லொரேன்கோ பகுதிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.