அரசியல் சட்ட வரம்பை மீறி தன்னிச்சையாக

செயல்படுவதாக கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆபாச பட விவகாரம்

புதுச்சேரி கவர்னர் கிரண் பெடியின் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச படம் அனுப்பிய கூட்டுறவுத்துறை பதிவாளர் சிவக்குமாரை இடைநீக்கம் செய்தார். இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சருக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக கவர்னர் மீது அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.

அரசின் முடிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என முதல்–அமைச்சர் விதித்த தடை உத்தரவையும் கவர்னர் ரத்து செய்தார். இதனால் கவர்னருக்கும், முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளை கொண்டு தனித்து செயல்படுகிறார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்காமல் அவர்களது தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். எம்.எல்.ஏ.க்களையும், அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் வகையிலேயே அவரது செயல்பாடு உள்ளது. இது கண்டனத்திற்கு உரியது.

அரசுக்கு தான் அதிகாரம்

கவர்னர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக இருந்தாலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963–ன்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி தான் கவர்னர் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

கவர்னரின் நடவடிக்கையால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் செய்யும் பணிகளை செய்ய கவர்னர் தேவையில்லை. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலத்துக்கு கூடுதல் நிதி பெற்று இருக்கலாம். புதிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம்.

உள்துறைக்கு புகார்

முதல்–அமைச்சரின் உத்தரவை கவர்னர் ரத்து செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அரசின் ஆலோசனையின்படி கவர்னர் செயல்பட வேண்டும், அரசியல் சட்டவரம்பை மீறி அவர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். தனித்து செயல்படும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை மத்திய உள்துறை மந்திரிக்கு அனுப்பி உள்ளோம். உள்துறை அமைச்சகம் எடுக்கும் நடவடிக்கையை பொருத்து எங்களுடைய அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.