ஊர்காவற்றுறை , எழுவைதீவின் இடையே பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக மாவட்டத்தின் விசேட திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் புதிய படகிற்கு எழுதாரகை எனப்பெயரிட முன்மொழியப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
எழுவைதீவில் வாழும் மக்களின் நன்மை கருதி ஊர்காவற்றுறைக்கும் எழுவைதீவிற்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக மாவட்டத்தின் விசேட திட்டத்தின் கீழ் புதிதாக ஓர் படகு அமைக்கப்படுகின்றது. இவ்வாறு அமைக்கப்படும் படகானது விசேடமாக வடிவமைக்கப்படுகின்றது. ஏனெனில் எழுவைதீவுக் கடற்பிரதேசம் ஓர் ஆழம் குறைந்த கடறபிரதேசம் . இதனால் கடலின் ஆழத்திற்பேற்பவே வடிவமைக்கப்படுகின்றது.

இவ்வாறு வடிவமைக்கப்படும் படகின் மொத்தப் பெறுமதியானது. 135 மில்லியன் ரூபாவாகும். இதற்காக 2016ல் 80 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவான 55 மில்லியன் ரூபாவினை படகு கட்டுமானம் நிறைவடையும்போது செலுத்தப்படும். குறித்த படகு 2017ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எம்மிடம் கையளிக்கப்படும். குறித்த படகில் 65 பயணிகள் பயணிக்க கூடியதான வகையில் கட்டப்படுகின்றது.
இவ்வாறு வடிவமைந்து ஊர்காவற்றுறை எழுவைதீவு இடையில் சேவையில் ஈடுபடவுள்ள படகிற்கு எழுதாரகை எனப் பெயரிடுவதற்கு முன்மொழிந்துள்ளோம். என்றார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே வடதாரகை சேவையில் உள்ளது அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகையும் சேவையில் இணையவுள்ளதோடு ஏப்பிரல் மாத்த்துடன் எழுதாரகையும் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.