சர்வதே முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத்தின் காந்தி

நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு 5 நாள் வர்த்தக கண்காட்சியும் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. ருவாண்டா அதிபர் பால் ககாமே, செர்பியா பிரதமர் அலெக்‌சாண்டர், ஜப்பான் பொருளாதாரத்துறை அமைச்சர் சேகோ ஹிரோசீஜ், டென்மார்க் எரிசக்தி துறை அமைச்சர் லார்ஸ் கிலீலிஹோல்ட், கென்யா அதிபர் உகுரு கென்யதா, போர்ச்சுக்கல் பிரதமர் அன்டானியோ காஸ்டா, ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகேசின், போலந்து துணை பிரதமர் பாய்டர் கிளின்ஸ்கி, தெற்காசிய விவாகரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார்.

அதன்பின் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பேசியதாவது: இந்தியாவின் வலிமை, மக்கள், ஜனநாயகம், மற்றும் தேவை ஆகியவற்றில்தான் உள்ளது. ஜனநாயகத்தால் விரைவான நிர்வாகத்தை அளிக்க முடியாது என சிலர் கூறலாம். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இது சாத்தியம் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம். மேக் இன் இந்தியா பிரசாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது உற்பத்தி துறையில் 6வது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.

சிறந்த நிர்வாகத்தை அளிப்போம், முந்தை ஆட்சிகளில் நிலவிய ஊழலை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துதான் ஆட்சிக்கு வந்தோம். இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தொழில் தொடங்க ஒவ்வொரு நாளும் நாங்கள் கொள்கைகளையும், நடைமுறைகளையும் எளிதாக்கி வருகிறோம் என்றார்.