ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. மெரினாவில் மனிதச்சங்கிலி போரட்டம்!

மெரினா கடற்கரையில் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இன்று மனிதச்சங்கிலி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் அங்கு திரண்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு முன் தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை மெரினாவில் இன்று காலையலேயே திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்கள் மூலமாக மெரினாவில் ஒன்றிணைந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.