டொனால்டு டிரம்பின் அந்தரங்க தகவல்களை சேகரித்த இங்கிலாந்து உளவாளிக்கு ரஷ்யா எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த

டொனால்டு டிரம்ப் வரும் 20 ஆம் ததேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள பராக் ஒபாமா தன் நாட்டு மக்களிடம் இறுதி உரையை நிகழ்த்தினார். அவர் அந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்னர், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பின் அந்தரங்க தகவல்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக, புஷ்பீடு என்ற நிறுவனம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டிருந்தது.

உறுதிப்படுத்தப்படாத இந்த ஆவணங்கள் உலக அளவில் வைரலாக பரவி வருகிறது. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் டிரம்ப் செய்த சில விஷயங்களை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் டிரம்பின் மீது சில எதிர்மறையான விமர்சனங்கள் விழுந்தன.

ஆனால் இதற்கு டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது ஒரு FAKE NEWS என ஆவேசமாக டுவிட் செய்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் குறித்து தகவல்களை எல்லாம் தொகுத்தது, இங்கிலாந்தை சேர்ந்த கிரிஸ்டோபர் ஸ்டீல் எனும் முன்னாள் MI6 உளவாளி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த ரஷ்ய தூதரகம் கிரிஸ்டோபர் ஸ்டீல் குறித்து எச்சரிக்கை விடும் வகையில் மர்மமான டுவிட் ஒன்றை செய்துள்ளது.

இதனால் கிரிஸ்டோபர் ஸ்டீல் ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாகவேண்டுமே என்று அஞ்சுகிறாராம். இதனால் அவர் உயிருக்குப் பயந்து இங்கிலாந்தின் சர்ரேவில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று இரவே கிளம்பி, தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்தின் MI6 உளவு அமைப்பு அவரை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.