நெதர்லாந்தில் ஹேர்லின் பிரதேசத்தில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயதுடைய தமிழ் சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நெதர்லாந்தில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் மீசாலையை பிறப்பிடமாகவும், நெதா்லாந்து Heerlin என்ற இடத்தை வசசிப்பிடமாகவும் கொண்ட செல்வம் தாருஷன் என்ற ஈழத்துச் சிறுவன் சக மாணவா்களின் துன்புறுத்தல்கள் மற்றும் ஏளன பேச்சுக்கள் காரணமாக உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த எட்டாம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

2001 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் திகதி பிறந்த ஈழத்துச் சிறுவனான செல்வம் தாருஷன் மீது திணிக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் ஏளனப் பேச்சுக்களை கண்டித்தும், நெதர்லாந்து பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதை முழுமையாக தடுக்குமாறு வலியுறுத்தியும் நாளை மறுதினம் 15 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு நெதர்லாந்தில் அமைதி ஊா்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்திகளை ஏந்திய வண்ணம் நடைபெறவுள்ள இந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு நெதர்லாந்து மக்கள் அவையும், தமிழ் கத்தோலிக்க ஆண்மீக பணியகம் உட்பட தமிழ் அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.