வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்தின் மீது தனியார் பேரூந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு, நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்று இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்விலும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை உறுதிப்படுத்தியிருந்த தநிலையில் இன்று காலை தனியார் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்திருந்தது.

எனினும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேரூந்துகள் தமது பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்தினூடாக செல்வதற்கு தனியார் பேரூந்துகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிணங்க தமது பேரூந்தை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்தினூடாக செலுத்தியபோது, அங்கு இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களால் வழிமறிக்கப்பட்டு தனியார் பேரூந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி, நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர்.

இதேவேளை, அங்கிருந்த சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தனியார் பேரூந்து ஊழியர்கள் வீதிக்கு குறுக்காக நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனரை்.

இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்தின் மீது தனியார் பேரூந்தை சேர்ந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் சமரசம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் சாரதியொருவர் அக்கரைப்பற்று – யாழ்ப்பாணம் பேரூந்தை வேகமாக செலுத்த முற்பட்ட வேளையில், தனியார் பேரூந்து சேவையை சேர்ந்தவர்கள் நகராமல் வீதிக்கு குறுக்காக இருந்ததுடன் பேரூந்தின் முன்பாகவும் பாய்ந்தனர்.

இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்த முரண்பாடு இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.