உலகின் பல பாகங்களிலும் பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறு தமிழ் மக்கள் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

 

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த நிலை மாற்றம் பெற்றுள்ளது. எனினும், தற்போது ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அதிகளவான மக்கள் அகதிகளாக செல்கின்றனர்.

குறிப்பாக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர் குடியேறிகள் மீதான பிரித்தானிய அரசின் சித்திரவதைகள் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் அகதி கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் என கருதப்படும் பெண்களை தடுத்து வைக்கும் இடமே Yarl’s Wood சிறைச்சாலை.

குறித்த சிறைச்சாலையானது அருகில் அமைந்துள்ள நகரங்களுக்கு கூட தெரியாமல் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில். குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மீது பாலியல் கொடுமை மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சித்திரவதைகள் குறித்த தகவல்கள் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான சித்திரவதை தொடர்பான செய்திகளை சில ஊடகங்களினால் மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சித்திரவதை மற்றும் அரசியல் படுகொலை என்பவற்றில் சர்ச்சைக்கு பேர் போன நாடான பஹ்ரைன் பிரித்தானிய அரசுடன் மிக நெருங்கி நட்புறவை கொண்டுள்ளது.

பஹ்ரைன் நாட்டில் இடம்பெற்ற சித்திரவதைகளுடன் பிரித்தானிய நாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த காலங்களில் மனித உரிமைகள் அமைப்பு குரல் எழுப்பியிருந்தன.

இந்நிலையில், தற்போது பஹ்ரைன் நாட்டில் இருந்து சித்திரவதைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, Yarl’s Wood சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் இருந்து பிரித்தானியா சென்ற அதிகாரிகள் குழுவே இவ்வாறு Yarl’s Wood சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஹ்ரைன் நாட்டு அதிகாரிகள் சித்திரவதைகள் தொடர்பான முறைமைகளை அறிந்து கொள்வதற்காகவே குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பரவலாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.