அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் இலங்கை அகதிகள்!

தமிழகத்தின் விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லலுறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குல்லூர் சந்தை இலங்கை கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் 305 இலங்கை அகதிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குறித்த முகாமில் உள்ள பலர் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். குறித்த முகாமில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் பெரிய வள்ளிக்குளத்திலிருந்து, குல்லூர் சந்தை வரை செல்லும் வீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் தாம் போக்குவரத்து நடவடிக்கைகளிலும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளதாகவும், இதனால் வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தனியார் மூலம் இந்த முகாமில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இயந்திரங்கள் மற்றும் தொட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன எனவும், ஆனால் மின் இணைப்பு இல்லாததால் அவை உபயோகிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு தமக்கான அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் குறித்த அகதிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.