லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக இன்று 18 தை 2017 காலை 10மணி தொடக்கம் மதியம் 1.00 மணிக்கும் மேலாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடாத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழக மாணவர்களாலும் பொதுமக்களாலும் நடாத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

கடுமையான குளிர் காலநிலையை பொருட்படுத்தாமல் பலநூற்றுக்கணக்கான மக்கள் இன உணர்வோடு கலந்து தமது தமிழக மக்களுக்கான ஆதரவையும் PETA அமைப்பு மற்றும் இந்திய மத்திய மாநில அரசுகளுக்ககான கண்டனங்களையும் பதிவுசெய்தனர்.

ஏறுதழுவல் எங்கள் உரிமை, தடை செய் தடை செய் petaவை தடை செய், மாணவர்களை விடுதலை செய், காவல்துறை காவல்துறை இந்தியாவின் ஏவல்துறை, இந்தபடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா, காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம்…. போன்ற கோசங்கள் பலமாக ஒலித்தன.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தமிழக மக்களுக்கும் தமிழர் உரிமைகளுக்கும் தெரிவித்தனர்.