உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய திகதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே தேர்தல் சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.

இதன்படி, கூட்டணி அமைத்தல், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திகதி அறிவிப்பு வெளியான பின்னர் அடுத்தகட்ட நகர்வுகளை அசூர வேகத்தில் முன்னெடுப்பதற்குக் கட்சிகள் தயாராகவே இருக்கின்றன.
மைத்திரி அணி, மஹிந்த தரப்பு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், தேர்தலில் தனித்துக் களமிறங்கவுள்ளதாக மஹிந்த அறிவித்துள்ளதால் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் மஹிந்தவுடன் சங்கமிப்பதற்கு விரும்பம் கொண்டிருந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய வியூகங்களை மைத்திரியும் வகுத்து வருகின்றார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலப்படுத்துவதில் மைத்திரியும், புதிய கூட்டணியைப் பலப்படுத்துவதில் மஹிந்தவும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், நீயா, நான் என்ற பலத்தைக் காட்டும் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என இருவரும் கங்கணம்காட்டி செயற்பட்டு வருகின்றனர்.
அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின் கீழேயே போட்டியிடும் என்றும், ஒரு சில தொகுதிகளில் தனித்துக் களமிறங்கக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளது. ஜே.வி.பியும் தனித்தே களமிறங்கும். எனினும், தேசிய அமைப்பொன்றை உருவாக்குவது குறித்தும் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய சோஷலிஸக் கட்சி, நவசமசமாஜக் கட்சி, முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆகியனவும் தனித்தே போட்டியிடவுள்ளன.உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இம்மாதத்துக்குள் விடுக்கப்பட்டு ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.