மழையின்  மத்தியிலும் 14ஆவது (13/02/2017)நாளாக போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும்  ஏனைய  தலைமைகளால்  எங்களுக்கு உரிய தீர்வை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
இராணுவத்திடமிருந்து விரைவில் எமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம்  ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட வடிவத்தை தீவிரப்படுத்தி எமது காணி விடுவிப்பை துரிதப்படுத்தும் வகையில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க  எமக்கு ஆதரவினை வழங்கும்  அனைத்து  சிவில் சமூக அமைப்புகளும் முன்வர வேண்டுமென கேப்பாபிலவு மக்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
எமக்கு இதுவரையில் பல்வேறு தரப்பினரால் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு  இன்னும் பல சிவில்  அமைப்புகளால்  எமக்காக நேரில் வந்தும் ஆதரவு  வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் எமக்கான காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை. எமது பிரச்சினையை அரசு பாராமுகமாகவே பார்த்துவருகின்றது.
இந்த நிலையில் எமது போராட்டத்தை பல்வகைப்படுத்தி தீவிரப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன்மூலம்தான் அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எமது பிரச்சினை தொடர்பில் பாரிய அழுத்தம் ஒன்றினை வழங்க முடியும். எனவே எமக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து  எமக்காக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என  அனைவரும்  கடந்த 31ஆம் திகதி தொடக்கம்  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு நேற்றையதினம்  முல்லை வலய கல்வி பணிப்பாளர் திருமதி உ. புவனராஜா  போராட்டக் களத்துக்கு வருகைதந்து பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய் ந்ததோடு மாணவர்கள்  பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோரை ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டி ருந்தார்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பங்குத்தந்தைமார்  மற்றும் அருட்சகோதரிகள்  மக்கள் ஆகியோரும் வருகைதந்து மக்களுக்கான ஆதரவினை தெரிவித்தனர்.
அத்தோடு நேற்றையதினம்  முல்லை மாவட்ட சட்டத்தரணிகள்  வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு சட்ட உதவிகள் தேவைப்பட் டால் தாம் இலவசமாக உதவ தயாராக இருப்பதாகவும் மக்களிடம் தெரிவித்தனர்.
அத்தோடு  சமூக வலைத்தளமூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழுவினரால் போராட்ட களத்திலுள்ள  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பல வழங்கப்பட்டன.
அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும், சிவில் அமைப்புகளும் வருகைதந்து மக் களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது.