சூப்பர்டூப்பர் டிவி நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன. நமது எம்ஜிஆர் செய்தித்தாளுக்கு சந்தாதாரர் மூலம் ரூ.15 கோடி வந்துள்ளதாகவும் அந்த பணம் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு ஜெயலலிதா தரப்பில் எந்த விளக்கமும் விசாரணை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்தக் கணக்கு வழக்குகள் தொடர்பான விஷயங்களை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபித்துள்ளது.

சொத்து குவிப்பு பலவிதம்:

சசிகலா பெயரில் ஜெயலலிதா பவர்ஆப் அட்டார்னி செய்து கொடுத்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தை சசிகலா சுதந்திரமாக நிர்வாகம் செய்துள்ளார் என்றும் அதில் சசிகலா பங்குதாரராக இருந்தார் என்றும் விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனக்கு வந்த நிதியை ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா வரவு வைத்ததும் மேலும் சில கணக்குகளை தொடங்கி சொத்துக்களை சேர்த்ததும் விசாரணை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சசிகலா நடவடிக்கை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் நிதிபரிமாற்றங்கள், அந்த நிதியை பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதா கூறியிருந்ததை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒரே நாளில் 10 நிறுவனம்:

இந்த 10 நிறுவனங்களில் எந்த வர்த்தகமும் நடந்ததாக எந்த ஆவணங்களும் இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவும் இல்லை. ஒரே நாளில் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமும் எந்த வர்த்தகத்தையும் செய்யவில்லை. அதே நேரத்தில் இந்த நிறுவனங்கள் மூலம் பெருமளவில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நேரத்தில் எந்த தனிப்பட்ட நிதி ஆதாரங்களும், வளங்களும் அந்த நிறுவனங்களுக்கு இல்லை. நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன் மூலம் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளதும் ஏற்கக் கூடியதாக இல்லை. இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து இந்தப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ஜெயலலிதாவும் சசிகலாவும், இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒரே வீட்டில் இருந்து கூட்டுச் சதியில் ஈடுப்பட்டதும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவில் மோசடி:

லெக்ஸ் பிராப்பர்ட்டிஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் குற்றவியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனங்–்களை மீட்க அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதை விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையிலும் சாட்சியங்கள் விசாரணையின் அடிப்படையிலும் ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்றம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், கூட்டுச் சதி பிரிவின் கீழும் தண்டனை வழங்கியுள்ளது. அதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரையும் கூட்டுச்சதி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நீதி மன்றம் தண்டித்தது.

நகைகளை விற்று அபராதம்:

குற்றவாளிகளுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் நிரந்தர வைப்புக் கணக்குகள், பண இருப்பு தொகை ஆகியவற்றை முடக்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும், அதில் குறைவு ஏற்பட்டால் வழக்கு தொடர்பாக முடக்கி வைக்கப்பட்டுள்ள 7040 கிராம் நகைகளை ஏலம் விட்டு அதிலிருந்து அந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவி–்ட்டுள்ளது. மீதம் உள்ள தங்கம் மற்றம் வைர நகைகள் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனங்கள் சொத்துகள் :

லெக்ஸ் பிராப்பர்ட்டிஸ், மெடோஅக்ரோபார்ம், ராம்ராஜ் அக்ரோ மில்க, சைனோரா பிசினஸ் எண்டர் பிரைசஸ், ரிவர்வே அக்ரோ புரடக்‌ஷன், இண்டோ தோகா கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூடிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராத தொகையில் ரூ.5 கோடி கர்நாடக அரசுக்கு வழக்கு செலவுக்காக தர வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது. பெரும்பாலான நிறுவனங்களில் சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் மட்டுமே உரிமையாளர்களாக இருந்தனர். இந்த நிறுவனங்களுக்கு ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் இணைந்தே இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெளிவாகியுள்ளது.

2 கோடிக்கு நகைகள்:

விசாரணை நீதிமன்றம் மிக ஆழமாகவும் நுட்பமாகவும் சொத்துகள் மற்றும் பொருட்களின் மதிப்பீடுகளை ஆய்வு செய்துள்ளது. ஜெயலலிதா, புடவைகள் வாங்கியதில் ரூ.32 லட்சம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வைர நகைகள் ரூ.2 கோடி என குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. சுதாகரன் திருமணச் செலவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வருமானம், செலவுகள், சொத்துகள், ஆகியவற்றை முழுவதுமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விஷயங்களை கர்நாடக உயர் நீதி மன்றம் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையின் போது கவனிக்கத் தவறிவிட்டது. இந்த வரவு செலவுகள் தொடர்பா குற்றவாளிகள் தரப்பிலும் பெரிய அளவில் வாதிடவில்லை.

தெளிவான விசாரணை:

இந்த மேல் முறையீடு வழக்கில் 6 நிறுவனங்களின் சொத்துகள் சம்பந்தப் பட்டுள்ளன. கர்நாடக உயர்நீதி மன்றம் அந்த சொத்துகளை விடுவிக்க உத்தரவிட்டு இருந்தது. விசாரணை நீதிமன்றம் சொத்துகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் தற்போது அந்த சொத்துகள் விசாரணை நீதிமன்றத்தின் அடிப்படையில் மீண்டும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விஷயத்தில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் எந்த தவறையும் காணவில்லை. வழக்கில் கூட்டுச்சதி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததும் வழக்கில் 6 நிறுவனங்களும் சம்பந்தப்பட்டு இருப்பதும் விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக உயர்நீதிமன்றம் அந்த சொத்துகளை விடுவித்ததை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது.

ஐகோர்ட் பெரும் தவறு:

வழக்கில் சொத்துகள் பறிமுதல், மதிப்பீடு ஆகியவை குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. எனவே,கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 8.12 சதவீதமாக கர்நாடக உயர்நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. இந்த கணக்கீடு முழுவதுமாக தவறாகும் என்று ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த கணக்கீடு விஷயத்தில் பெரும் தவறை செய்துள்ளது. கணக்குப் பிழை, கூட்டல் கழித்தல் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளின் கணக்குகளை மதிப்பீடு செய்து அதற்கான சதவீதத்தை நிர்ணயம் செய்வது சரியாகாது என்று கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. சொத்துகள், வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவை தொடர்பாக விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் முடிவுக்கு வந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரு மாறுபட்ட நிலையை எடுத்திருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்தோம். சாட்சியங்களை பார்க்கும் போது ஜெயலலிதா உள்ளிட்ட நான்குபேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்தாலும்:

ஜெயலலிதா, அரசு ஊழியர் என்ற முறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதும், சொத்துகளை வாங்க சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும், நான்கு பேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜிதேந்தர் குமார் சிங்- புதுடெல்லி, சிபிஐ வழக்கில் கடந்த 2004ம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ‘‘ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 4(3)ல் அரசு ஊழியர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரசு ஊழியர் அல்லாதவர் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அரசு ஊழியர் மரணம் அடைந்துவிட்டால், அவரோடு சேர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்–்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படாது’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எனவே, அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ஏற்புடையதுதான்.

கூட்டுச்சதியில் ஜெயலலிதா:

கூட்டுச்சதி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் சாட்சிகள் அடிப்படையிலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையிலும் தீர விசாரித்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது சரிதான். ஜெயா பப்ளிகேஷனில் பரிவர்த்தனை தொடர்பாக சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர்ஆப் அட்டார்னி கொடுத்துள்ளது, வழக்கில் உள்ள 995ம் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பவர் ஆப் அட்டர்னியை ஜெயலலிதா முழுமனதுடன் தான் கொடுத்துள்ளார். இந்த நிறுவனத்தில் சசிகலா நிதிகளை கையாண்டுள்ளார். முறைகேடு நடந்த காலகட்டத்தில் ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. சசிகலாவும், சுதாகரனும் தனித்தனியாக சொத்துகளை வாங்கியுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன் மூலம் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டில் இருந்தே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன. அதனால், இந்த நிறுவனங்கள் குறித்து தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறியுள்ளதை ஏற்க முடியாது. ரத்த சம்மந்தம் இல்லாத சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதா வீட்டில் வசித்துள்ளனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவின் நிதி ஆதாரங்கள் மூலம்தான் ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளனர். நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு போயஸ் கார்டனில் வசிக்க அனுமதி அளித்தாலும், அளிக்கவில்லை என்றாலும் இவர்கள் மூன்று பேரும் ஜெயலலிதா வீட்டில்தான் வசித்துள்ளனர். அங்கிருந்துதான் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர்.

உடனே சரணடைய வேண்டும்

சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை உறுதி செய்யப்படுவதுடன் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பில் கூறியபடி தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் அடிப்படையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். விசாரணை நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு வழங்கிய தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ேவண்டும்.

கூட்டுச் சதி தெளிவாக நிரூபணம்

சசிகலாவும் இளவரசியும் தனிப்பட்ட முறையில் வியாபாரம் மூலம் தங்களுக்கு பணம் வந்ததாக விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இருவரும் சேர்ந்து ஏராளமான நிலங்களை வாங்கியுள்ளனர். ஜெயலலிதா வீட்டில் இருந்தே இந்த செயல்களில் ஈடுபட்டதால், கூட்டுச்சதி நிரூபணம் ஆகியுள்ளது. சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ₹1 கோடி முன்பணம் கொடுத்துள்ளது மட்டுமல்லாமல் பல வங்கிக் கடன்களை வாங்கவும் காசோலைகள் கொடுத்துள்ளார். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் அதன் மூலம் சட்ட விரோதமாக தங்களது பெயரில் சொத்துகள் வாங்கிக் குவித்ததும் விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் குற்றவாளிதான்

வருமான வரி்த்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா தரப்பில் ரூ.1 கோடி சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்துக்கு பங்கு முதலீடாக வழங்கியதாக ஜெயலலிதா தெரிவி–்த்துள்ளார். எனவே ஜெயலலிதாவுக்கு சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்தில் தொடர்பில்லை என்பதை ஏற்கமுடியாது. ஒரு கணக்கில் இருந்து மறு கணக்கிற்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு நிறுவனங்கள் பெயரில் சொத்து வாங்கியதில் ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளதும், கூட்டுச் சதி நடந்துள்ளதும் பத்திரப் பதிவு அலுவலக ஆவணங்கள், அதிகாரிகளின் சாட்சியங்கள் நிரூபித்துள்ளன.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ரத்து செய்கிறோம். மேலும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம். அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான். இந்தமேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

நீதிபதிகளின் நெத்தியடி கருத்துக்கள்

* வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது.

* சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

* இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

* பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள்.

* இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.

* இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்து விடும்.

* இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.

* இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

* வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள்.

* இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்