ஹார்ட் அட்டாக் தெரியும். பிரெயின் அட்டாக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மூளைத்தாக்கு, பக்கவாதம் என இதற்கு வேறு பெயர்களும்

உண்டு. அதிகம் அறியப்படாத பிரச்னையாக இருந்தாலும் அவசரசிகிச்சை அளித்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்கு அபாயமானது.

மூளைத்தாக்கு ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், சிகிச்சைகள், வராமல் தவிர்க்கும் வழிமுறைகள் எல்லாவற்றையும் பார்ப்போம்.

அறிகுறிகள்

* முகத்தில் திடீரென ஏற்படுகிற மரத்துப்போகிற உணர்வு. குறிப்பாக ஒரு பக்கத்தில்.

* பேசுவதில், புரிந்துகொள்வதில் ஏற்படுகிற திடீர் குழப்பம்.

* பார்வையில் குழப்பநிலை.

* நடப்பதில் சிரமம்… நிலைதடுமாறிய நிலையை உணர்தல்.

* திடீரென ஏற்படும் காரணமற்ற கடும் தலைவலி.

இவற்றை உணர்ந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மருத்துவரை நாட வேண்டும்.

ஹார்ட் அட்டாக்கா? பிரெயின் அட்டாக்கா?

பிரெயின் அட்டாக்கால் பாதிக்கப்படுவோருக்கு அது மூளையின் பாதிப்பு என்பது தெரிய வாய்ப்பில்லை. திடீரென சுயநினைவை இழப்பதையும், மயங்கி விழுவதையும் மாரடைப்பின் அறிகுறிகளாகவே நினைத்துக் கொள்வார்கள். இதைக் கண்டுபிடிக்க FAST என்கிற டெக்னிக்கை பரிந்துரைக்கிறது ‘தி நேஷனல் ஸ்ட்ரோக் அசோசியேஷன்.’

1. ஸ்மைல் ப்ளீஸ்…

சிரிக்கச் சொல்லி அவரின் மூலம் சிரிப்பு ஒரு பக்கமாகக் கோணிச் செல்கிறதா என்பதை வைத்து முகவாதத்தைக் கண்டுபிடிக்கலாம். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களுக்குச் சிரிப்பு இயல்பானதாகவே இருக்கும்.

2. கையைத் தூக்கு… காலைத் தூக்கு…

நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு, கையையும் காலையும் உயர்த்த முடிந்தால், அது மூளைத்தாக்கு அல்ல.

3. பெயர் என்ன?

மூளைத்தாக்கால் பாதிக்கப் பட்டிருந்தால், பெயரை நினைவு படுத்திச் சொல்வதில் சிரமமும் குழப்பமும் இருக்கும். இல்லா விட்டால் தன் பெயரைத் தெளிவாகச் சொல்வார்.

4. நேரம்…

இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் வந்தால், நேரம் பொன்னானது என அவசர சிகிச்சைக்கு விரைய வேண்டும்.

மேலே சொன்னவை எல்லாம் சுயநினைவை இழக்காதவர்களுக்குத்தான். அரிதாக சிலர் சுயநினைவை இழக்கக்கூடும். அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி ஸ்கேன் செய்தே என்ன பிரச்னை என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.