திமுகவைப் பொறுத்தவரை குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க மாட்டோம். தேர்தல் மூலமே ஆட்சி அமைப்போம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

”சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியுள்ளார். திமுகவைப் பொறுத்தவரை குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க மாட்டோம். தேர்தல் மூலமே ஆட்சி அமைப்போம். இதை செயல்தலைவர் ஸ்டாலினும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களைப் பார்த்த பிறகு தமிழக மக்கள் யார் வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளனர். எனவே, எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக அமோக வெற்றிபெறும்.

அதிமுக ஒரு திராவிட கட்சியல்ல. திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக அதிமுக நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி திமுக மட்டுமே” என்று கனிமொழி கூறினார்.