புனேவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு

எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதன்படி பேட் செய்ய தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆஸ்திரேலிய வீரர்கள், மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்களை இழந்து, 256 ரன்களை சேர்த்திருந்தது. ஸ்டார்க் மற்றும் ஹாஸ்ல்வுட் களத்தில் இருந்தனர். 2வது நாள் போட்டி இன்று காலை தொடங்கிய உடனே, முதல் ஓவரை வீசிய அஸ்வின், ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து, 260 ரன்களில் ஆஸ்திரலேய அணி, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக, ரென்சா 68, ஸ்டார்க் 61 ரன்களும் சேர்த்திருந்தனர்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். குறிப்பாக, உமேஷ் யாதவ், அஸ்வின் ஜோடியின் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக, ஆஸ்திரேலிய வீரர்கள், 180 ரன்களில் தொடங்கி, 260 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாக, 7 விக்கெட்களை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது