தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனித்திருப்பதாகவும், தமக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதில் அசமந்தப்போக்கில் செயற்படுவதாகவும் உறவுகளை தொலைத்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வயது வேறுபாடின்றி மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் தமது ஆதங்கங்களை கண்ணீர் மல்க ஊடகங்களிற்கு தெரிவித்து வருகின்றனர். இப் போராட்டத்திற்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

அத்துடன் வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகள் இன்று முதல் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அதனை தொடர்ந்து ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வலியுறுத்தி வவுனியா மக்கள் கடந்த மாதமும் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் போராட்டத்தை கைவிட்டு, அலரி மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இதனால் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது