இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் மாணவர்கள், இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்ற இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இயற்கை எரிவாயு எடுத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று கூறி இந்த திட்டத்துக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நெடுவாசல் பகுதி மக்கள் கடந்த 16–ந்தேதி முதல் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நெடுவாசல் பஸ் நிலையம் அருகே பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நெடுவயல் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடங்கிய இந்த போராட்டத்தில் முதலில் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அதன்பிறகு அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விவசாய சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் நெடுவாசல் களத்திற்கு வந்து பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் நேற்று முன்தினம் பொதுமக்களை சந்தித்து பேசினர். அப்போது, இந்த திட்டத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று 11–வது நாளாக போராட்டம் நீடித்தது. நெடுவாசல் கிராமத்தில் நாடியம்மன் கோவில் முன்பு மரத்தடியில் நேற்று நடைபெற்ற போராட்டம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நெடுவாசல் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் வெள்ளையன், திரைப்பட இயக்குனர்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜ் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தார்.

இருப்பினும் அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தருமாறும், போராட்டத்தில் பங்கேற்க வருமாறும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதை ஏற்று வெளியூர்களில் இருந்தும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள வரத்தொடங்கி உள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைகிறது. எனவே பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள். ரகுபதி, மெய்யநாதன், துரை சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று நல்லாண்டார்கொல்லை பகுதி வயல்வெளியில் தகர கொட்டகை அமைத்து பொதுமக்களும், விவசாயிகளும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோட்டைக்காடு என்ற கிராமத்திலும் பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

உரிமை மீட்புக்குழு மற்றும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் திரளாக கலந்துகொண்டனர்