இயக்குனர் முத்தையா மீண்டும் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் முத்தையா 2013ம் ஆண்டு சசிகுமார், லட்சுமி மேனனை வைத்து ‘குட்டிப்புலி’ என்ற படத்தின மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் முத்தையா. அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கினார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

அடுத்து விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘மருது’ படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது.அந்தப் படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ‘கொம்பன்’ படம் வெற்றி பெற்ற சமயத்திலேயே சூர்யா படத்திற்காகவும் முத்தையா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சூர்யா படத்தை இயக்குவதற்காக காத்திருந்தார் முத்தையா. ஆனால், ‘மருது’ படம் தோல்வியடைந்ததால் முத்தையாவிற்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டார் சூர்யா.

அதனால்தான், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் நடிகர் சூர்யா. .இதற்கு மேலும் காத்திருக்க விரும்பாத முத்தையா, தன்னை அறிமுகப்படுத்திய சசிகுமாரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாராம். ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தின் தோல்வியால் தடுமாறிக் கொண்டிருக்கும் சசிகுமாரும் முத்தையா இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.