இலங்கையில் அரச படையினர் பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகளை திட்டமிட்டு ஒரு ஆயுதமாகப் பாவித்து வருகின்றனர் என்று கடந்த தசாப்த காலமாக பரவலாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை இதுவரை மறுத்து வந்த இலங்கை அரசாங்கம் நேற்றையதினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முதன்முறையாக அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் சித்திரவதைகள் அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல் வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும் தெரிவித்து வந்த நிலையில், ஜெனிவா ஐ.நா மனித பேரவையின் 34ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, அங்கு இடம்பெறும் சித்திரவதைகளை தடுத்து நிறுத்த அது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதன்மூலம் உள்@ரிலும், சர்வதேசத்திலும் சித்திரவதை தொடர்பில் முன்வைத்துவரும் குற்றச் சாட்டுக்களை இலங்கை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வது இதுவே முதற்தடவையாகும்.கடந்த வாரம் ஜெனிவாவில் இடம்பெற்ற பெண்களுக்கெதிரான சித்திரவதை உள்ளிட்ட அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் கூட இலங்கையில் அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான கேள்விக்கும், நெருக்கடிக்கும் இலங்கை உள்ளாகியிருந்தது.
இதனைவிட பிரித்தானியா வைத்தளமாகக் கொண்டியங்கும் சித்திரவதைக்கெதிரான அமைப்பும் ஜொஹானஸ்பேர்க் கைத் தளமாகக் கொண்டியங்கும் இலங்கையில் உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பும் இலங்கை அரச படைத் தளங்களில் சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் இடம் பெற்று வருவதாக ஆதாரங்களுடன் முன்வைத்துள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அங்கு சித்திரவதை தொடர்சியாக இடம்பெற்று வருவதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
“நாம் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மிகவும் சிரத்தையுடன் கவனத்தில் எடுத்துள்ளோம். கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருத்ததைப் போன்று, நாம் சித்திரவதை தொடர்பில் பூச்சிய சகிப்புத்தன்மையினைக் கொண்டிருக்கிறோம்.
அண்மையில் தேசிய மனித உரிமை ஆணைக்குழு இலங்கையில் சித்திரவதை இடம்பெறும் எண்ணிக்கையின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அங்கு ஒரு சித் திரவதை சம்பவம் இடம்பெற்றாலும், நாம் அது குறித்து மிகவும் சிரத்தையுடன் செயற்படுகிறோம்.
 ஏனெனில், ஒரு சம்பவமே பல சம்பவங்களுக்கு ஒப்பானது. இலங்கை மனித உரிமை ஆணைக் குழு, பொலிஸ் ஆணைக்குழு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களுமே சித்திரவதையை தடுத்து நிறுத்தவும், அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவும் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.
ஏனைய விடயங்களைப் போலவே,  இந்த விடயத்திலும் எமக்குத் தொழிநுட்ப உதவிகள் தேவைப் படுகின்றன. இந்த விடயத்தில் அனுபவமுள்ள உறுப்பு நாடுகள் எமக்கு அதனைத் தந்து உதவும் என நான் நம்புகிறேன்\” என்று அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் தெரிவித்துள்ளார்.